மீன் பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்
தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, ஆண்களுக்கு மட்டுமான வேலையாகவே கருதப்படும் மீன் பிடித் தொழிலைக் கையில் எடுத்திருக்கிறார் பழங்குடியினப் பெண்ணான பல்லம்மா.
குசுமாஞ்சி மண்டல் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பல்லம்மா, மீன் பிடித்தலைச் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.பாலாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் எரகடா தண்டாவைச் சேர்ந்தவர் பல்லம்மா. 30 வயதான இவர், ஒரு வருடத்துக்கு முன்னர் தனது வயதான பெற்றோர் மற்றும் தம்பியைக் காப்பாற்றுவதற்காக மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.
நீச்சலில் பல்லம்மாவுக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரின் தந்தையால் வெளியே சென்று சம்பாதிக்க முடியாத நிலைமை இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து, பல்லம்மாவை மீன் பிடி தொழிலைத் தேர்ந்தெடுக்க வைத்தன.
பல்லம்மாவின் கணவர், அவரை விட்டுச் சென்றவுடனே தனது குடும்பத்துக்காக முழுமையாக உழைக்க ஆரம்பித்தார் பல்லம்மா.
"எங்களின் தண்டா கிராமத்தில் ஏராளமான பெண்கள் மீன்களை விற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் என் மகள் மட்டும்தான் மீன்பிடித்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிறாள்; தனது இரண்டு குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்ற ஆசைப்படும் பல்லம்மா, அரசாங்கத்தின் துறைகள் அவளுக்கு முடிந்த உதவிகளைச் செய்தால் கஷ்டப்படும் பெண்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்வாள்" என்கிறார் பல்லம்மாவின் தந்தை மாங்யா.
இது குறித்து பல்லம்மா,
"சின்ன வயதில் அப்பா அடிக்கடி என்னை பாலாறு நீர்த்தேக்கத்துக்கு அழைத்துச் செல்வார். அப்போதுதான் மீன்பிடித்தலின் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.
இப்போது வரை அப்பாவின் பழைய வலையைத்தான் பயன்படுத்துகிறேன். புதிய வலைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார்.
அரசு, பல்லம்மாவின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற, அனைத்து வகையிலும் உதவி செய்யும். இன்னும் சில நாட்களில் 10,000 ரூபாய் மதிப்பிலான மீன் பிடி வலை மற்றும் படகு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கம்மம் மீன் வளத்துறை உதவி இயக்குநர், வி ஸ்ரீனிவாஸ்.
No comments:
Post a Comment